இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் நகரத்தின் முக்கிய சந்திப்புகளில்  தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 7000த்துக்கும் மேற்பட்டோர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2376 பேர் ஆகும். மேலும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருக்கு மேல் சேர்ந்து பயணித்தவர்கள் 573 பேர், இதனை அடுத்து பயணத்திற்காக வாகனங்களில் டீன்டட் கண்ணாடி பயன்படுத்தியவர்கள் 97 பேராவர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1213 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 7230 பேர் சாலை விதிகளை மீறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை காவல் துணை ஆணையர் தினேஷ்குமார் குப்தா கூறியதாவது,”டெல்லியின் முக்கியமான சந்திப்புகள் மற்றும் முக்கிய சாலைகளில்  சிறப்பு குழுக்கள் அமைத்து குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஹோலி பண்டிகை முன்னிட்டு சாலை விதிகளை மீறுவது பெரிய விபத்துகளையும், அதிக அளவு உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக அமையலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் சாலைகளில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக சாலைகளின் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும்,காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.