மகாராஷ்டிராவின் புனே நகரில் கடந்த சில நாட்களாக தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட ‘டெலிவரி பாய்’ பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கோந்துவா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த 22 வயது இளம்பெண்ணை கூரியர் டெலிவரி செய்த இளைஞர், மயக்கமருந்து ஸ்பிரே அடித்து பலாத்காரம் செய்ததாகவும், அவரது செல்போனில் ‘நான் மீண்டும் வருவேன்’ என எழுதி மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் வெளியானதும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. காவல்துறையின் தீவிர விசாரணையின் போது, அந்த இளைஞருக்கு அந்தப் பெண்ணுடன் ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது. மேலும், இளம் பெண்ணின் செல்போனில் அவர்களுடைய பழைய புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், அந்த இளைஞர் புனித நாளன்று அந்த வீட்டுக்கு அழைக்கப்பட்டதாகவும், இருவரும் சம்மதத்துடன் நேரம் கழித்ததாகவும் தெளிவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம் – அதாவது “நான் மீண்டும் வருவேன்” என இருந்த மெசேஜ் அந்த இளைஞரால் எழுதப்பட்டது அல்ல, அந்த இளம்பெண் தனது மொபைலில் புகைப்படத்தை எடிட் செய்துவிட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவித்துள்ளனர்.

இப்போது அந்த இளம்பெண் உண்மையில் மனநிலை சீராக உள்ளாரா என்ற கேள்விக்காக மருத்துவ பரிசோதனைகளும், தீவிர விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக இப்படி ஒரு புகாரை கற்பனை செய்து, காவல்துறையை பெரிதும் கலக்கம் அடைய வைத்தார் என்பது தற்போது மைய விசாரணையாக மாறியுள்ளது. இந்த வழக்கு, சமூகத்தில் தவறான புகார்கள் எப்படி அரசு அமைப்புகளை தவறாக உபயோகப்படுத்த வைக்கக்கூடும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.