வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்கள். அதில் 15 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறினார். அந்த ரகசியத்தை அவரே கூற மறுத்துவிட்டார். இப்படி பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர். திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் ஏதாவது கொண்டுவரப்பட்டுள்ளதா? இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. ஐந்து ஆண்டுகளை முடிப்பதற்குள் ஸ்டாலின் ஐந்து லட்சம் கோடி கடனை வாங்கி விடுவார்.

இதுதான் அவருடைய ஆட்சியில் ஸ்டாலின் செய்த சாதனையாக இருக்கும். தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என கூறினோம். தற்போது முதல்வர் ஸ்டாலின் போதைப் பாதையில் இளைஞர்கள் போக வேண்டும் என விளம்பரம் செய்து வருகின்றார். அதிமுக ஆட்சியில் அரிசி விலை 45 ரூபாய் முதல் 50 ரூபாயாக இருந்தது. தற்போது 80 ரூபாய் உயர்ந்து விட்டது. அதனைப் போலவே மளிகை பொருட்கள் விலை, மின் கட்டணம், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் என அனைத்தையும் திமுக அரசு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்து விட்டது. இதையெல்லாம் தெரியாத பொம்மை முதல்வராகவும் எழுதிக் கொடுப்பதை படிக்கும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.