
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் ஒரு லிவின் உறவாகத் தொடங்கிய காதல், கடைசியில் இரு குழந்தைகளின் கொலையுடன் முடிந்தது. இந்த கொடூர சம்பவம், குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020-ம் ஆண்டு பேஸ்பூக் மூலமாகத் பழகத் தொடங்கிய பாவின், அனிஷா என்பவரும் திருமணம் செய்யாமல் லிவின் உறவாக வாழ்ந்துள்ளனர். அனிஷா, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். ஆனால் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத காரணத்தால் கழுத்தை நெறித்து கொலை செய்து, வீட்டின் பின்னால் புதைத்துள்ளார். எட்டு மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் எலும்புகளை தோண்டி எடுத்து, பாவினிடம் கொடுத்தும், அதை அழிக்க சொல்லியுள்ளார்.
இதனையடுத்து, 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இரண்டாவது குழந்தை பிறந்ததும், அதையும் கொலை செய்த அனிஷா, குழந்தையின் உடலை துணியில் கட்டி பாவினிடம் கொடுத்துள்ளார். பாவின் அந்த உடலை வீட்டின் பின்னால் புதைத்துள்ளார். மறுபடியும் எட்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த குழந்தையின் எலும்புகளையும் தோண்டி எடுத்துள்ளனர். இதையடுத்து பாவினுக்கும், அனிஷாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அனிஷா அவரை விட்டு விலக முயன்றுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பாவின், அதிகமாக மது அருந்திய நிலையில், குழந்தைகளின் எலும்புகூடுகளை எடுத்துச் சென்று, நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் நடந்த விசாரணையில், இரண்டு கொலைகளும் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்காடு காவல் துறையினர் பாவினையும், அனிஷாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.