
இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதும் தினம்தோறும் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 12% அதிகரித்துள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு நாளில் குறைந்தது 462 பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இறப்பவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 42,671 பேர் 25 முதல் 35 வயது உடைய இளைஞர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் மாநில வாரியாக தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதிக சாலை விபத்துக்கள் கொண்ட பிற மாநிலங்கள் மத்திய பிரதேசம் அங்கு சுமார் 54,432 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் 43, 910பேர் ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 41,746 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட பட்டியலில் உத்தர பிரதேச மாநிலத்தை அடுத்து தமிழ்நாடு உள்ளது.
அதிகாரப் பூர்வ தகவல்களின்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4, 70,403 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 4,56,959 ஆகவும், கடந்த 2020இல் 3,71,181 ஆகவும் குறைந்தது. இதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டில் 4,12,432 ஆக உயர்ந்தது. இதன் பின் கடந்த 2022 இல் 4,61,312 உயர்ந்துள்ளது.
2023 இல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக அறிக்கையின்படி, வேகமாக வண்டியை ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சட்டங்களை மீறுதல் போன்ற காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு முறையான அணுகு முறையை பொதுமக்கள் இடையே வலியுறுத்தி வருகிறது.