
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் திமுக கட்சியின் எம்பி. இவருடைய வீட்டிலும் அமைச்சர் துரைமுருகனின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக வேலூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் சோதனை நடைபெற்றது. இவர்களுக்கு சொந்தமான கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது 44 மணி நேரத்திற்கு பிறகு சோதனை நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே வீடுகளில் சோதனை நடைபெற்ற போது ஆவணங்கள் மற்றும் பணம் போன்றவைகள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் துரைமுருகன் அதனை மறுத்தார்.
இதேபோன்று திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடைபெற்ற போது சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தற்போது திடீரென டெல்லிக்கு விரைந்துள்ளார். நேற்று இரவு சென்னையில் இருந்து இரவு 10 மணி அளவில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் விமானத்தில் டெல்லி விரைந்தனர். இவர் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளாரா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளாரா என்று விவரம் வெளிவரவில்லை. மேலும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென துரைமுருகன் டெல்லிக்கு விரைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.