
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் திருப்பதியில் அலை மோதுகிறது. 30 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள்.
திருப்பதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ. 4.21 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதன் பிறகு நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று 43,862 பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த இரு தினங்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.