
மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தொடர்பான மகாராஷ்டிரா அரசின் புதிய முடிவு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது என அறிவித்துள்ளது. மாணவர்களின் இடை நிற்றலை குறைத்து, அவர்களை தொடர்ந்து கல்வி பயில முடிவு எடுக்க இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சில மாணவர்களுக்கு கற்றலில் சிரமம் ஏற்படுவதால், இந்த பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அதையடுத்து, இந்த பாடங்களில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்காக மஹாராஷ்டிரா அரசு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியலில் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேற அனுமதி அளிக்கப்படும். இதனால் மாணவர்கள் இடை நிற்காமல், தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது மாணவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த 20 மதிப்பெண் மட்டும் பெற்றவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு அனுமதி கிடையாது. இதனால், கலை மற்றும் வணிகப் பிரிவுகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.