தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech Super Star என்ற புதிய சேனலுடன் 15 லட்சம் வரவேற்பாளர்களை பெற்றிருக்கும் சுதர்சன், கடந்த ஆண்டு தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மருத்துவவல்லுநர் விமலாதேவியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது  30 சவரன் தங்க நகை, ₹5 லட்சம் ரொக்கம் மற்றும் ₹2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டாரால் வழங்கப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு குறைந்த காலத்திலேயே, மேலும் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹10 லட்சம் பணம் தேவை என கூறி சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விமலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. வீட்டுக் கட்டுமானம் முடிவடையாத நிலையில், விமலாவின் தாய் வீட்டார் மீண்டும் ₹5 லட்சம் வழங்கியதாகவும், பின்னர் குழந்தை பிறந்த பின்பு கூட, விமலா மற்றும் பிள்ளையை தன்னுடன் வாழ அனுமதிக்க ₹10 லட்சம் பணம் கேட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் 27-ஆம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விமலாதேவி எழுத்துப்பூர்வ புகார் அளித்ததை அடுத்து, சுதர்சன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தாய் மாலதி, சகோதரி சக்தி பிரியா மற்றும் மைத்துணர் விக்னேஸ்வரன் ஆகியோர் மீது வரதட்சனைத் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, யூடியூபர் சுதர்சனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைப்பெறுகின்றன. சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.