தூத்துக்குடியில் இருந்து சிமெண்ட் கலவை மரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரத்தினகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் லாரி தாராபுரம்-திருப்பூர் ரோட்டில் சூரியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதி அதே வேகத்தில் கலாமணி என்பவரது டீக்கடைக்குள் புகுந்தது.

இந்த கோர விபத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி(80), விவசாயி முத்துசாமி(65), செல்லாத்தாள்(65), கோவிந்தசாமி(75), பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மகேந்திரன்(19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். லாரி டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுப்பிரமணி, முத்துசாமி, ரத்தினகுமார் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 3 பேருக்கும் தீவன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.