
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டை பகுதியில் அரசு பேருந்து டிரைவரான அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு நேற்று முன்தினம் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அசோக்குமார் மெய்யனூர் பணிமனைக்கு பேருந்தை ஓட்டி சென்று எரிபொருள் நிரப்பி விட்டு மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது நுழைவு வாயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பேருந்துக்கு முன்னால் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் கோபமடைந்த 3 பேரும் அசோக் குமாரை சரமாரியாக தாக்கி திட்டியுள்ளனர். இதில் காயமடைந்த அசோக்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசோக் குமாரை தாக்கிய ஜெயசூர்யா, விக்னேஷ், கிஷோக் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.