
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 1/2 வயது சிறுமி காலை அங்கன்வாடிக்கு சென்றார். அதன் பிறகு மாலை வீட்டிற்கு வந்தபோது சிறுமியின் உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அருகில் இருந்த முட்புதருக்குள் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டு அழுததால் சிறுவன் அருகே கிடந்த கல்லால் சிறுமியின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக தாக்கினார். இதனால் சிறுமியின் கண் சிதைந்தது.
இதற்கிடையே சிறுமி வீட்டிற்கு வராததால் பெற்றோரும், உறவினர்களும் அவரை தேடி சென்றனர். அப்போது புதர் பகுதியில் தலையில் ரத்த காயத்துடன் சிறுமி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.