தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக புயல் நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த புயல் அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்மண்டலமாக வலு விழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக சித்தங்குடி மற்றும் வெங்கட் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியோடு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதேபோன்று தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதுவரை தமிழக வரலாற்றில் 10 முறை மட்டும் தான் இவ்வளவு அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கேத்தியில் 82 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானதுதான் இதுவரையில் அதிகபட்சமாகும்.

இதேபோன்று கடலூரில் 18 cm அளவுக்கு மழையும், மரக்காணத்தில் 23.8 cm அளவுக்கு மழையும் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்ததாக கூறப்பட்ட நிலையில் புயல் நகராமல் இருப்பதால் தமிழ்நாட்டில் இன்றும் ‌பல  மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது‌. மேலும் இன்று தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.