
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவை சேர்ந்த பிரோஸ் என்ற நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் பிரோஸ் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பைக் போன்றவற்றை வாங்கி தர வேண்டும் என்று அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் திடீரென பிரோஸ் தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
பின்னர் இது தொடர்பாக விசாரித்ததில் கடந்த 15ஆம் தேதி ப்ரோஸ் ஒரு பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இவர் முதல் திருமணத்தின்போது தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாமல் அடித்து விரட்டியதும் தெரியவந்தது. இந்நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் தன் இரண்டாவது மனைவியிடம் வந்த ப்ரோஸ் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி மீண்டும் அவருடன் வாழ தொடங்கினார். அவரை நம்பி மனைவியும் ஏற்றுக்கொண்ட நிலையில் சம்பவ நாளில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்புகளை ஊட்டி விட்டு வீட்டிலிருந்த நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கு தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் காலை அந்த பெண்ணின் சகோதரி வந்தபோது அவரது மனைவி மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.