
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 17 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கேவை சொந்த மண்ணில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்ற நிலையில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தோனி மீது விமர்சனங்கள் குவிந்துள்ளது. முன்னாள் வீரர்கள் கூட தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது 197 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விரைந்த சிஎஸ்கே, தொடக்கமே சொதப்பியது. ருத்துராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகியதும், இரண்டு ஓவர்கள் முடிவில் 8/2 என்ற நிலையில் விழுந்ததும், அணியின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ரச்சின் ரவீந்திரா (41) மற்றும் சாம் கரன் சற்று நிலைநாட்ட முயற்சி செய்தனர். ஆனால் ரன்ரேட் அதிகமாகியதால், அதிலும் அவர்கள் தடுமாறினர்.
அந்த நெருக்கடியான தருணங்களில் தோனி இன்னும் டக்அவுட்டில் கூடை கட்டிக்கொண்டு காத்திருப்பது ரசிகர்களையும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. 13வது ஓவரில் யாஷ் தயால் இரட்டை விக்கெட் எடுத்ததும் (ரவீந்திரா மற்றும் துபே), அணியின் வெற்றிப் பாதை மேலும் தடுமாறியது. ஆனால் அந்த நேரத்திலும் தோனி வராமல், அதற்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். ரன்ரேட் ஓவருக்கு 16-க்கும் அதிகமாக இருந்த நிலையில், இது பெரும் சந்தேகங்களை எழுப்பியது.
தோனி 18-வது ஓவரில் தான் களமிறங்கினார். அப்போது மேட்ச் வெறும் கணக்குக்கான விளையாட்டாகவே மாறியிருந்தது. அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தாலும், அதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இருந்தாலும், அது வெற்றிக்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசி ஓவரில் குருனால் பாண்ட்யாவுக்கு எதிராக அடித்த இரண்டு சிக்ஸ்கள் கூட ரசிகர்களிடம் “இது தேவையா?” என்ற கேள்வியை எழுப்பின.
இந்த முடிவை முன்னாள் இந்திய வீரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் ராபின் உதப்பா இருவரும் கடுமையாக விமர்சித்தனர். “தோனி நம்பர் 9-ல் வந்தது சரியான முடிவல்ல. இது அணிக்கு பலனளிக்கவில்லை,” என பதான் கூற, உதப்பா “சேப்பாக்கில் ஆட்டத்தை வெல்லும் முக்கிய வாய்ப்பு எம்எஸ் தோனி முன்பே வந்திருந்தால் கிடைக்கலாம். அவரை நம்பர் 9-ல் அனுப்பியது எந்தவிதமான நியாயமும் இல்லாத முடிவாக இருந்தது,” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
2008 பிறகு சேப்பாக்கில் பெங்களூரு சிஎஸ்கேவை தோற்கடித்தது இதுவே முதல் முறை என்பதும், ஆனால் அதைவிட இந்த தோல்வியில் ‘தோனியின் தாமத பேட்டிங்’ தான் மேலும் ரசிகர்களை வாட்டி வதைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.