மத்தியப் பிரதேசம், போபாலின் பஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி நகரில் உள்ள கராரியா பண்ணை பகுதியைச் சேர்ந்த வீடு எண் 34-ல் நடைபெற்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர் தனது லிவ்-இன் உறவிலிருந்த காதலியான ரித்திகா சென்னியை, குடிபோதையில் கழுத்தை நெரித்து கொன்று வீட்டில் சடலமாக மூன்று நாட்கள் வைத்திருந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த ஜூன் 28 மற்றும் 29ம் தேதிகளுக்கு இடையே, இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, சச்சின் ராஜ்புத், ரித்திகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அதே தாளில் சடலத்தை சுற்றி வீட்டில் வைத்துவிட்டு பின்னர் கதவை மூடி விட்டு, தப்பி ஓடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சச்சின் தனது நண்பரிடம் இந்த கொடூர உண்மையை பகிர்ந்துள்ளார்.

சச்சினின் நண்பர், இந்த தகவலை உடனடியாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பஜாரியா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, ரித்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். போலீசார் சச்சினை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஜாரியா போலீஸ் இன்ச்பெக்டர் ஷில்பா கவுரவ் அளித்த தகவலின் படி, சச்சின் மற்றும் ரித்திகா, சுமார் 3.5 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். இருவரும் விதிஷா மாவட்டம் சிரோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 10 மாதங்களாக போபாலில் கராரியா பண்ணை பகுதியில் வசித்து வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இருவருக்குள் தகராறுகள் மோசமாகியதாகவும், அதற்குப் பின்பே இந்த கொடூரம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சச்சின் ராஜ்புத் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இது திட்டமிட்டு செய்த கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம், லிவ்-இன் உறவுகளின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.