
சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 21 ஆண்டுகளாக காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் முனுசாமி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், ரகசிய தகவலின் அடிப்படையில் முனுசாமியை கைது செய்துள்ளனர்.
இவர் மீது திருமுல்லைவாயில், ஜெஜெ நகர், தலைமைச் செயலக காலனி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமார் வீட்டில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியாக முன்னுசாமி அடையாளம் காணப்பட்டிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாததனால், பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டும், அவரை கைது செய்ய முடியாமல் இருந்தது.
பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை செய்வதில் நிபுணர் எனவும், இதற்காகவே தலைமறைவாக இருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.