தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு ‌ விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாநாடு தொடங்கும் நிலையில் போலீசாரின் கட்டுப்பாட்டோடு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு விஜய் தொண்டர்களுக்கு மூன்றாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மாநாட்டுக்கான பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் வைத்துக்கொண்டு தொண்டர்கள் அனைவரும் வரவேண்டும்.

அதன் பிறகு உங்களுக்காக விசாலை என்ற இடத்தில் என் கைகளை விரித்து வைத்துக் கொண்டு இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். எனவே கைகளிலும் மனதிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏந்தி கொண்டு வாருங்கள். 2026 ஆம் ஆண்டு இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க இருக்கிறோம். எனவே அரசியல் கட்டுப்பாட்டுடனும் உலகமே உற்று நோக்கும் வகையிலும் முதல் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். மேலும் இதற்கு தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.