தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இப்படியான நிலையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தோடு செயல்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், இனிமேலும் பழனிசாமியை நம்பி தொண்டர்கள் அவரது பின்னால் சென்றால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா இயக்கத்திற்கு அவர் மூடு விழா நடத்தி விடுவார். அவருடைய பேச்சை நம்பி தொண்டர்கள் செயல்படுவது நல்லதல்ல. இப்படியே போனால் அதிமுக என்ற கட்சியே  இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.