பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த இளைஞர் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2000 பாம்புகளை காப்பாற்றியுள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை பாஷி பஞ்சாயத்தில் ஒரு நாகப்பாம்பு தென்பட்டதாக ஜெய்க்கு தகவல் வந்தது.

அந்த தகவலின் படி ஜெய் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். வழக்கம்போல் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தன் கையை மட்டுமே நம்பிக்கையாக வைத்துக் கொண்டு பாம்பை பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நாகப் பாம்பு அவரது கையில் கடித்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக ஜெய் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து “ஜெய் எந்த வித பயமும் இல்லாமல் பாம்புகளும் ஒரு உயிர் தான் என்ற உணர்வுடன் அவற்றைக் காப்பாற்றி வந்தார். ஆனால் இன்று அதே பாம்பு அவரை கடித்தது இயற்கையின் கசப்பான வலியுணர்வு என்று அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் இந்த இளைஞனின் மரணம் பாம்பு மீட்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவருக்கான விழிப்புணர்வாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.