
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரி பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கோவிந்தபுரம் அருகே சென்றபோது மினி லாரியும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மினி லாரியின் அடிப்பகுதி பேருந்துக்குள் சிக்கிக் கொண்டது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். அதற்குள் மினி லாரியில் பயணித்த முகமது சமீர்(25), கார்த்தி(31) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர். மேலும் கல்லூரி பேருந்தில் பயணித்த 20 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.