காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் எடிசன் குறைந்த மார்க்குடன் தோல்வியடைந்ததால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் எடிசன் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.  நீண்ட நேரமாக அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எடிசனை தேடி அலைந்தனர். அப்போது ஒரு கல்குவாரியின் அருகே மோட்டார் சைக்கிள் மற்றும் எடிசனின் செருப்பு கிடப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் எடிசனின் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர்.

பின்னர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக எடிசனை தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.