
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களது அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் தவெக தற்போது கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணியில் முழுமையாக செயல்பட்டுவருகிறது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இயக்கமாக தற்போது கட்சி அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதன் இலக்கு – 2 கோடி பேர் உறுப்பினராக சேர்ப்பது. இந்தப் பணியை ஓர் இயக்கமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பரப்புரை வேலைகளும் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இத்துடன், வரும் செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்சிக்காக பணியாற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அனுசரணையை மதிப்பீடு செய்து, முடிவில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.