
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இவர்கள் அந்த குழந்தையை வளர்த்து வந்த நிலையில், இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பந்தப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிறந்து ஐந்து நாட்கள் ஆன அந்த குழந்தையை டாக்டர் சத்யபிரியா என்பவர் கொடுத்ததாக கூறினார். இவரிடமிருந்து 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து குழந்தையை வாங்கியதாக அவர்கள் கூறிய நிலையில் டாக்டர் சத்யபிரியாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்ததும், திருமணத்திற்கு முன்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது மற்றும் குழந்தையை விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இது பற்றி குழந்தைகள் நல அதிகாரிகள் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து டாக்டர் சத்திய பிரியாவை கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி கலெக்டரிடம் பரிந்துரை செய்த நிலையில் கலெக்டர் உத்தரவு வழங்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.