தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அவுஸ்திரேலியா இளைஞர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.4 மணி நேரங்களை ஆன்லைனில் செலவிடுகின்றனர். அதே சமயம் நான்கு வெவ்வேறு சமூக ஊடக சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எந்த ஒரு சமூக ஊடகத்தையும் பயன்படுத்த தடை விதிக்கப்படும். 14 மற்றும் 15 வயதுடையவர்கள் கணக்கை அணுக பெற்றோரின் ஒப்புதல் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சமூக ஊடக வயது நடைமுறையை அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை ஆராய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாக பெருகிய சான்றுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.