தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பண பலன், 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகுதியில் சலுகை போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது

மேலும் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் தமிழகம். தமிழக அரசு நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெற்றுப் பேப்பர் அளித்திருக்கலாம். இந்தியாவில் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஓய்வூதியம் அளிக்கக் கூட முடியாத அளவிற்கு தமிழ்நாடு அரசு தத்தளிக்கிறது. டாஸ்மாக் ஊழலில் போக்குவரத்து துறையை மையப்படுத்தி மட்டும் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.