
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்ற பாகுமதி ரயில் கடந்த 12ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த ரயில் விபத்திற்கு நாசவேலையே காரணம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
இதுபோன்று ரயில்களை கவிழ்த்து பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பெரும்பாலான முயற்சிகளை ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன.
இதுபோன்று கடந்த சில மாதங்களாகவே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் மூட்டைகள், சைக்கிள்,கியாஸ் சிலிண்டர், இரும்பு கம்பிகள் போன்ற பொருட்களை வைத்து ரயிலை கவிழ்க்க நாச முயற்சித்தனர். ரயிலை கவிழ்க்கும் நாச வேலைக்கான முயற்சிகள் 24 முறை நடைபெற்றுள்ளதாகவும், இதில் 90 சதவீதம் முயற்சிகள் ரயில்வே ஊழியர்களால் முறியடிக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.