
மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 134க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் இ-சேவை மையங்களில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். விரைவில் இ-சேவை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இன்னும் விரைவாக சேவைகள் கிடைக்கும். 12,525 கிராமங்களுக்கும் ‘டான்பிநெட்’ திட்டத்தின்கீழ், பைபர் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் இணைப்பு வேகம் அதிகரிக்கும் என்றார்.