
புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி அறிவித்ததின்படி, அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும். இதற்கான நிதி ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரேஷன் கடைகளின் திறப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்போது நிதி குறைபாடு மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. நேரடி பணப்பரிமாற்றம் மூலம் மக்கள் பயன்பெற முடியவில்லை என்பதாலேயே, மத்திய அரசு உத்தரவின் பேரில் தற்போது மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அரிசி மற்றும் மானிய உதவிகளை மீண்டும் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ரங்கசாமி இதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார். இதற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததோடு, இப்பொழுது தீபாவளிக்கு முன்பாக நியாய விலை கடைகள் திறக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேநேரத்தில், நியாய விலை கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், தொடர்ந்து சம்பளம் வழங்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மேலும், ரேஷன் பொருட்களை வீடு, வீடாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது.