சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஷாம் ரவி ஓட்டி வந்த நிலையில் அவருக்கு பின்னால் ரோகித் அமர்ந்திருந்தார்.

வேளச்சேரி மேம்பாலத்தில் ஏறும்போது அசோக் சொக்கலிங்கம் என்பவர் ஒட்டி வந்த கார் பழுதாகி சாலையின் நடுவே பார்க்கின் விளக்குகளை எரியவிட்டவாறு நின்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காத ஷாம் ரவி வேகமாகச் சென்று காரின் பின்பகுதியில் மோதினார். இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஹெல்மெட் அணியாததால் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் வீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.