அதிமுக மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பொறாமையில் பொங்கிக் கொண்டிருக்கிறார். திமுக தன்னுடைய ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி ஜனநாயக படுகொலை செய்து ஈரோடு இடைத்தேர்தலை சந்தித்ததால் தான் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டது.

இன்று மக்களோடு மக்களாக களத்தில் நின்று கொண்டிருப்பது அதிமுக தான். தமிழக மக்களும் அதிமுகவை தான் நம்புகிறார்கள். தமிழகத்தில் தற்போது ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய திமுக ஆட்சி உண்மையிலேயே நம்முடைய மாநிலத்தை கற்காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது மட்டுமல்லாமல் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு மற்றும் ரவுடிகளின் அராஜகமும் அதிகரித்துவிட்டது.

தேர்தலில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்ட திமுக மீது பொதுமக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதையெல்லாம் மறைக்கவும் திசை திருப்பும் நோக்கத்திலும் அதிமுக பற்றி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக நூலிழையில்தான் வெற்றி பெற்றது என்பதை முதல்வர் மறந்துவிட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று கரைந்து கொண்டிருப்பது திமுக தான் என்பதை உங்களுக்கு புரிய வைப்போம் என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.