வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின் அமைதியை வலியுறுத்தி ஷேக் ஹசீனா பதவி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனஸ் என்பவர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவை இந்தியா மீண்டும் வங்க தேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது முகமது யூனுஸ் இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்த மறுப்பதாக குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித சமுதாயத்திற்கு எதிராக பல்வேறு குற்றங்களை செய்துள்ளார்.

இதற்காக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரிடமும் விசாரணை செய்யப்படும். இதைத் தொடர்ந்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஹசீனாவிற்கு எதிராக 2 முறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதனால் அவரை நாடு கடத்த கோரி இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. வங்கதேச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றாலும் அவர் வழக்கை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்