திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வெல்டிங் மற்றும் ஒர்க்ஷாப் வேலைகளை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி, எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார்.

இவர் திருமணத்திற்கு முன்னர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் மற்றும் 3 வயதில் ஆதிரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

மே 8-ஆம் தேதி காலை பெரியசாமி தனது வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி மற்றும் அவரது மகள் ஆதிரா மட்டும் வீட்டில் இருந்தனர். மாலை நேரத்தில் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, ஆதிரா மூச்சுத் திணறும் நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் பார்வதி கூறிய வாக்குமூலத்தில், ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து தாலி சங்கிலியை பறிக்க முயன்ற போது, குழந்தையின் கழுத்தை நெரித்து விட்டதாக கூறினார். பார்வதி தொடர்ச்சியாக முரணான தகவல்களை கூறி வந்ததையடுத்து, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதால் மன உளைச்சலில் இருந்த பார்வதி, தொட்டில் கயிற்றால் தனது மகளை கழுத்து நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்தக் கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாகவும், சிசிடிவி பதிவுகள் உட்பட அனைத்து சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.