
கேரளாவின் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் தனது வேலைக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு விசிட் விசா மூலம் அபுதாபிக்கு சென்றார். இந்நிலையில் பல இடங்களில் வேலை தேடியும் அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் அவர் தனது விசிட் விசா காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக அபுதாபியில் தங்கியுள்ளார்.
இதையடுத்து அவரது கண் நரம்பு பாதிக்கப்பட்டு ஒரு கண் பார்வையை இழந்தார். அதேபோன்று மற்றொரு கண் பார்வையும் படிப்படியாக குறைந்ததால், தன் உடல் நலத்தை நினைத்து, சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் விசா காலம் முடிந்த பின்னரும் அபிதாபியில் தங்கி இருப்பதால் அதற்கான அபராதம் செலுத்தவும், விமான டிக்கெட்டுக்கான பணமும் அவரிடம் இல்லை.
இதனால் சுனில் இந்திய இணைத்தூதரகத்திடம் உதவி கேட்டார். அவர்கள் சுனிலின் கோரிக்கையை ஏற்று உதவி செய்தனர். மேலும் சுனில் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று சுனில் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்றார் .
இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரி கூறியதாவது, “அமீரகத்துக்கு வருபவர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். விசா காலத்துக்கான அளவை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்” என தெரிவித்தார்.