டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் (T1) கனமழையினால், வெளிப்புற மேம்பாலத்தில் அமைந்திருந்த கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது நடைபாதையில் இருந்த பகுதி சாய்ந்ததால், அந்த இடத்தில் பெரும் அளவில் தண்ணீர் பீறிட்டு ஓடியது. இந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 25 அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை, மணிக்கு 82 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் 81.2 மிமீ மழை பதிவானதாக தெரிவித்துள்ளது. இந்த திடீர் மற்றும் கடுமையான மழையின் தாக்கத்தால், டெல்லி விமான நிலையத்தில் 17 சர்வதேச விமானங்கள் உட்பட மொத்தம் 49 விமானங்கள் மாற்றி செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. தற்காலிகமாக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விமான நிலைய நிர்வாகம் இது தொடர்பாக விளக்கமளித்ததில், கூரை சாய்ந்தது கட்டமைப்பு பாதிப்பினால் அல்ல என்றும், அதிக நீர் தேக்கத்தை தடுக்க அமைக்கப்பட்ட வடிவமைப்பின் இயற்கையான செயல்பாடாகவே நடந்தது என்றும் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நகரத்தின் பல பகுதிகளில் நீர் தேக்கம், வாகன நெரிசல், மின்சாரம் துண்டிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.