
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் அந்தப் பெண் கடந்த மாதம் திடீரென உயிரிழந்து விட்டார். இதனால் அந்த பெண்ணின் கணவர் மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில் தற்போது பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் மனைவியின் மரணம் குறித்து பேசியுள்ளார். அப்போது தன்னுடைய மனைவி இயற்கையான முறையில் உயிரிழக்க வில்லை எனவும் தன்னுடைய மகள் கொன்றுவிட்டாள் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது 14 வயது சிறுமியும் அவருடைய காதலனும் சேர்ந்து அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு மருத்துவரிடம் போலியாக மருத்துவ சான்றிதழ் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அடக்கம் செய்துள்ளனர். அதன் பிறகு சிறுமியும் அவருடைய காதலனும் சேர்ந்து இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் அவரும் பயந்து போய் 2 மாதங்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமி மற்றும் அவரின் காதலனை விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் உண்மை என தெரிய வந்ததால் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார்கள் என்ற காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.