
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சல்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு போலியான விளம்பரம் செய்து பல இளைஞர்களை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளார். அதாவது வழுக்கை தலையில் முடி வளர தன்னிடம் ஒரு எண்ணெய் இருக்கிறது எனவும் அதனை தேய்த்துக் கொண்டால் முடி நன்றாக வளரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் அவரிடம் சென்றுள்ளனர். அதாவது அந்த எண்ணெயை தேய்த்துக் கொள்வதற்கு ஒருமுறை 20 மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்ததால் அதனை நம்பி ஏராளமானோர் சென்றனர்.
இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் குவிந்த நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவர் அனைவரிடமும் 20 ரூபாய் பெற்றுக் கொண்டு ஒரு சிறிய பிரஷ்சை வைத்து தன்னிடம் உள்ள எண்ணெயை ஒருமுறை தேய்த்துள்ளார். இதில் ஒரு மிகப்பெரிய கூத்து என்னவெனில் விளம்பரம் கொடுத்த சல்மானுக்கே முதலில் வழுக்கை தலை தான். அப்படி இருக்கும்போது அவர் அந்த எண்ணையை தேய்த்து முடி வளர்த்துக் கொள்ளாதது ஏன் என்று ஒருவர் கூட யோசிக்காமல் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். அவரிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டதில் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஷதாப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் சல்மான் உட்பட இருவரை கைது செய்த நிலையில் அவர் இதேபோன்று பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.