
மேற்கு வங்காளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் மனைவி ரிங்கு மஜும்தாரின் மகன் ஸ்ரீஞ்சோய் தாஸ்குப்தா (27) செவ்வாய்க்கிழமை காலை நியூடவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். காலை 7 மணியளவில் அவரது உடல், அறையில் உள்ள படுக்கையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிதான்நகர் துணை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது, இந்த மரணம் இயற்கையானதா அல்லது வேறு காரணமா என்பதைக் கூற முடியாத நிலை நிலவுகிறது. அதனால் அவரது உடல் தற்போது ஆர்ஜி கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இறந்த ஸ்ரீஞ்சோய், ரிங்கு மஜும்தாரின் முதல் திருமணத்திலிருந்து பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அருகிலுள்ளவர்கள் கூறுவதாவது, சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு வீட்டு விருந்தொன்று நடைபெற்றது என்றும், அதற்கு தொடர்புடைய ஏதாவது காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை காவல்துறைக்கு அவரின் குடும்பத்தினரிடமிருந்து எந்தவிதமான புகாரும் பெறப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.