நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே பெரிய கொல்லப்பட்டி பகுதி உள்ளது. தொழிலாளியான கோபி (40)-சங்கீதா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது‌. இதில் வீட்டில் வைத்து சுகப்பிரசவத்தில் அடுத்தடுத்து சங்கீதா 9 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் ஒரு குழந்தை மட்டும் இறந்துவிட்டது. இதில் ஒரு குழந்தையை தத்து கொடுத்து விட்டனர். அவர்கள் மீதமுள்ள 7 குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். இதில் சங்கீதா மீண்டும் கர்ப்பமானதால் உறவினர்கள் கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அதற்கான முதற்கட்ட சிகிச்சைகளை சங்கீதா எடுத்துள்ளார்.

ஆனால் திடீரென மனமாறி சிகிச்சைகளை பாதியில் நிறுத்திவிட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய அனுப்பி வைத்த நிலையில் சங்கீதா கருக்கலைப்பு செய்வதற்கு மறுத்துவிட்டார். அவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவர் கருவை கலைக்க மறுத்ததால் வேறு வழி என்று நேற்று அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது ஏற்கனவே அவர் 9 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமானதால் அவருடைய கருவை கலைக்க கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.