
பெங்களூருவில் உள்ள டொட்டனேகுண்டி கிராமத்தில், 32 வயதான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குரி கேட்கேகரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வியாழன் மாலை 5.30 மணி அளவில் சந்தேகமான சூட்கேஸ் ஒன்றைக் கண்டுபிடித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படிவந்த போலீசாரும், குற்றப்புலனாய்வு பிரிவு (FSL) அதிகாரிகளும் வீட்டுக்குள் சென்று சமையல் அறையில் இருந்தசூட் கேஸை திறந்து பார்த்த போது, அதில் உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண்மணியின் சடலம் இருப்பது தெரியவந்தது.
குரி கேட்கேகர், தனது கணவர் ராகேஷ் ராஜேந்திர கேட்கேகருடன் கடந்த மாதம் தான் பெங்களூருவிற்கு மாற்றி வந்து ஹுலிமாவு காவல் நிலைய எல்லையில் வசித்து வந்துள்ளனர். குரி பத்திரிகைத் தொடர்பான பட்டம் பெற்றவர் என்றும், வேலை இல்லாத நிலையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் நடந்துள்ளன. மார்ச் 26ஆம் தேதி ஏற்பட்ட வாக்குவாதம் மோசமாக மாறி, கணவர் ராகேஷ் அவரது மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி, கழுத்தை வெட்டி கொலை செய்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. பின்னர் அவரது உடலை சூட்கேஸில் அடைத்து, சமையல் அறையில் வைத்துவிட்டு புனேவுக்கு தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில், ராகேஷின் கைபேசி சிக்னல்களின் அடிப்படையில் அவரை போலீசார் புனேவில் கைது செய்துள்ளனர். குற்றத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து கூறிய தெற்குக் கிழக்கு பெங்களூரு காவல் துணை ஆணையர் சாரா பாதிமா கூறுகையில், “சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுகிறது, முழுமையான தகவல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரிய வரும்” எனத் தெரிவித்தார். மேலும், ராகேஷ் தனது மனைவியின் பெற்றோர்களிடம் இந்த கொலை குறித்து தகவல் தெரிவித்ததாக உள்ள வதந்திகளைப் பற்றி அவர் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.