தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார்.

மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பைகளை மட்கும் மட்கா குப்பை என தரம் பிரித்துக் கொடுக்கும் வீடுகளுக்கு பச்சை நிற ஸ்டிக்கரும், தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது.

மேலும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்காமல் பொது இடங்களில் கொட்டினால் 100 முதல் 200 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடைகளில் பாலித்தின் கவர்கள் விற்கப்படுகிறதா என சோதனை செய்தார்.

மேலும். மஞ்சப்பை, கூடை, துணிப்பை உள்ளிட்டவற்றை உபயோகிக்குமாறு கலெக்டர் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார். மண்புழு உர கொட்டகையை பார்வையிட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா மூலக்கரை ஊராட்சி பகுதிக்கு நவீன மண்புழு உர கொட்டகை செட்டுகள் அமைத்து தர வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.