உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், முதல் வாழ்க்கை தந்த அனுபவத்தால் திருமணம் இன்றி சேர்ந்து வாழ்வதற்கு மட்டும் ராணி சம்மதித்துள்ளார். குடிப்பழக்கம் கொண்ட முதல் கணவரால் தான் அனுபவித்த வேதனைகளை கூறிய ராணி அதுபோல கிஷோரும் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதற்கெல்லாம் கட்டுப்பட்ட கிஷோர் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இவ்வாறு சுமார் ஒரு வருடம் ராணி மற்றும் கிஷோர் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் கிஷோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இது குறித்து அறிந்த ராணி அவரிடம் சண்டையிட்டுள்ளார். தினம்தோறும் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று சண்டையிட்டுக் கொண்டு இருவரும் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது கிஷோரை பயமுறுத்தும் நோக்கில் ராணி ஒரு விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளார்.

அதாவது கிஷோர் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த ராணி எழுந்து வர முயற்சித்தார். ஆனால் அவர் தண்டவாளத்திலிருந்து ஏறுவதற்கு முன்பாக அந்த ரயில் தடத்தில் வேகமாக விரைந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு அலறினார். அவருக்கு உதவ கிஷோரும் ரயில் நிலைய பணியில் இருந்த ரயில்வே போலீசாரும் விரைந்தனர். அப்போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டதில் ராணி பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.