
சென்னை மாவட்டம் கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன்(55). இவரது மனைவி விண்ணரசி(48) இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று மாலை ராஜன் திரு வி.க.நகர் பல்லவன் சாலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்திற்கு சென்று கால்பந்து விளையாடியுள்ளார். பின்னர் இரவு விளையாடி முடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜனை சக விளையாட்டு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜனுக்கு இருதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
இதனால் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு ராஜன் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்