விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் பகுதியில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவர் தனது வீட்டின் முன் பகுதியில் கோலமாவு வியாபாரத்தை செய்து வந்துள்ளார். வாடிக்கையாளர்களுக்காக வீட்டு வாசலில் நிறைய கோலமாவு மூட்டைகளை அடுக்கி வைப்பது வழக்கம்.

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கோலமாவு வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்துவந்தது. இந்நிலையில், அவரது 3 வயது மகன் மேகராஜ் சகோதரனுடன் சேர்ந்து வீட்டு முன் கோலமாவு மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோலமாவு மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்தன. இதில் மேகராஜ் மூட்டைகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார். அருகில் விளையாடிய மற்றொரு சிறுவன் விரைந்து வீட்டுக்குள் சென்று விபத்தினை கூறியதைத் தொடர்ந்து, சின்னப்பராஜ் உடனடியாக மூட்டைகளை அகற்றி தனது மகனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.