நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (30) மற்றும் சதீஷ்முருகன் (30) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்மாற்றியின் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை மாற்றும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். அதற்குள் எதிர்பாராதவிதமாக, பேனரில் இருந்த இரும்புக் கம்பி மின்மாற்றியில் உரசியதால், இருவருமே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவம் நடந்தவுடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பேச்சிமுத்துவை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. கையில் காயமடைந்த சதீஷ்முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.