
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் போட்டியிட காத்திருந்தார் அம்பத்தி ராயுடு. அவ்வாறு நடக்காததால் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தத் தொடரில் விஜய் சங்கருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவருக்கு பதிலாக தனக்கு அந்த மாற்றுப் பட்டியலில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராயுடு எதிர்பார்த்தார். ஆனால் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு தெரிவித்தார். ஆனால் இதற்கு காரணம் விராட் கோலி தான் என்றும் மற்றும் அவருக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை போட்டியிலிருந்து நீக்கி விடுவார் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா குற்றம் சாடியுள்ளார்.
இந்நிலையில் உத்தப்பாவின் குற்றச்சாட்டை ராயுடு மறுத்து பேசி உள்ளார். அதாவது, “உத்தப்பா சொல்ல வந்தது கோலிக்கு விருப்பு வெறுப்பு உள்ளது என்பது மட்டும்தான். ஆனால் என்னை பொருத்தவரை கோலியால் என் ஆட்டம் பறிபோகவில்லை. அவருக்கு என்னை பிடிக்கும். அவர் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருப்பார்.அவர் தலைமையின் கீழ் தான் பல இந்திய போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். ஆகையால் கோலி என்னை நீக்கினார் என்றும் நான் கூற மாட்டேன். அது அணியின் ஒட்டுமொத்த முடிவாக தான் இருந்தது.எனக்கு கோலி மீது எந்தவித வெறுப்பும் கிடையாது” என்று கூறினார்.