
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்தித்து பேசினார். அப்போது தன்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை பரந்தூரியிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் உங்கள் வீட்டு மகனாக விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு என்னுடைய முதல் அரசியல் பயணத்தை உங்கள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியுள்ளேன் என்றார்.
அதன்பிறகு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது எனவும் இதற்கு பதிலாக விவசாய நிலங்கள் இல்லாத வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளுங்கள் என்றும் விஜய் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தான் என்றென்றும் உறுதுணையாக நிற்பேன் என்றும் விஜய் கூறினார். இந்நிலையில் விஜய் பேசும்போது தான் பரந்தூர் வர காரணமாக இருந்தது ராகுல் என்ற சிறுவன் தான் என்று கூறினார்.
அதாவது சிறுவன் ரா குல் பேசிய வீடியோவை பார்த்த பிறகு தான் பரந்தூர் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே தனக்கு வந்ததாக விஜய் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் யார் என்று இணையவாசிகள் தேட ஆரம்பித்த நிலையில் தற்போது அந்த சிறுவன் பேசிய வீடியோ சிக்கி உள்ளது. அந்த சிறுவன் வீடியோவில் மழலை மொழியில் பேசியதாவது, எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும். பள்ளிக்கூடங்களை விட்டால் போதும். எங்களுக்கு விமான நிலையம் கொடுத்து நாங்க என்ன மேலையா பறக்க போறோம்.
நாங்க படிக்கிற பள்ளிக்கூடம் பாதிப்படைகிறது. அவங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு நினைக்கும்போது நாங்க மட்டும் படிச்சு பெரிய ஆளா ஆக கூடாதா. விவசாய நிலம் இருந்தால் தான நாங்க சாப்பிட முடியும். அதை அழிச்சிட்டா நாங்க சாப்பாடுக்கு என்ன செய்வோம். ஏரி இருந்தால் தானே நாங்க வெயில் டைம்ல குளிக்க முடியும். அது இல்லன்னா நாங்க எங்க போய் குளிப்போம். விமான நிலையம் வேண்டாம் எங்கள் ஊரையும் பள்ளிக்கூடத்தையும் விட்டுடுங்க என்று சிறுவன் பேசியுள்ளான். மேலும் சிறுவன் மழலை மொழியில் பேசிய வீடியோ தான் விஜய் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக களத்தில் வந்துள்ளார் .