மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 300 பேருக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை விஜய் தொடங்கி வைத்த நிலையில் பல மாவட்டங்களில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் நேதாஜி ரோடு பகுதியில் மத்திய தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மூலம் இந்த விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமை பொறுப்பு வகிக்கிறார். இந்த உணவகத்தை தற்போது நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது உரிய அனுமதி இன்றி விலையில்லா விருந்தகம் அமைக்கப்பட்டதாகவும் இது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக சிராஜுதீன் கூறுகையில் கடந்த 150 நாட்களாக விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வந்தோம். ஆனால் முதல் மாநாடு முடிந்ததிலிருந்தே பல்வேறு சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் வருகிறது. மேலும் இது பற்றி கேட்டால் மேல் இடத்தில் இருந்து எங்களுக்கு அழுத்தம் வருகிறது என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் தற்காலிக பந்தல் அமைத்து அவர்களுக்கு நேற்று உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.