தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்ததுடன் அதில் 22-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து தற்போது மழைக்காலம் என்பதால் சமீபத்தில் மீண்டும் 5 கேள்விகள் கேட்டு காவல்துறை தரப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அவரின் வளர்ச்சியை பார்த்து திமுக பொறாமைப்படுவதாகவும் மாநாட்டுக்கு தடை போடுவதற்கான நடவடிக்கைகளில் திமுக ஈடுபடுவதாகவும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜயின் வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுவதாக சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து சீமான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, விஜய் வளர்ந்து விடுவார் என்ற பயம் திமுகவுக்கு இருக்கிறது. அதனால்தான் அவருடைய மாநாட்டுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுக்கிறார்கள். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்த போது இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. ஆனால் விஜய் மாநாடு நடத்தும் போது மட்டும் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்.? மேலும் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தால் கூட நான் அவருக்கு மட்டும் தான் ஆதரவு கொடுப்பேன். ஏனெனில் அவர் என்னுடைய தம்பி என்று கூறினார்.