தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக திமுக கட்சியின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, வேளாண் பட்ஜெட் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை உள்வாங்கியுள்ளோம்.

இது பட்ஜெட்டில் தெரியவரும். சினிமாவில் வரும் டயலாக் போன்று விஜய்யின் கருத்து இருக்கிறது. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, சொத்துரிமை உள்ளிட்ட பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது யார் என்பது அவர்களுக்கே தெரியும் என்று கூறினார். முன்னதாக விஜயின் கருத்து பற்றி பேசிய அமைச்சர் ரகுபதி தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு அரசியல் கட்சியாக நினைக்கவில்லை எனவும் நாங்கள் எப்போதும் அரசியல் கட்சிகளுடன் மட்டுமே மோதி பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார்.